செவ்வாய், 23 டிசம்பர், 2014

படங்கள், செய்தி : நன்றி, ஸ்ரீ சத்குரு அண்ணாமலை சுவாமிகளின் `கடைசி வார்த்தைகள்

வெளியீடு: ஸ்ரீ சத்குரு அண்ணாமலை சுவாமிகள் spiritual trust, திருவண்ணாமலை 3

அண்ணாமலை அடிவாரத்தில் வசிப்போர்க்கு எவ்விதத் தீக்ஷையும் தேவையில்லை என்று பகவான் சொல்கிறார். காந்தம் இரும்பைக் கவர்ந்து இழுப்பது போன்றே அண்ணாமலை ஞானத் தபோதனரைத் தன்பால் ஈர்க்கிறது என்று சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த மலை மீது வாழ்ந்த குகை நமச்சிவாயர் தமது பாடலொன்றில் கூறியிருக்கிறார். முற்காலத்தில் இம்மலையின் ஆற்றல் மறைக்கப்பட்டிருந்தது. ஆனால் பகவான் எல்லோருக்கும் அதைத் திறந்து விட்டார். அக்ஷரமணமாலை 98ஆவது பாடலில் பகவான் இது பற்றிப் பாடியுள்ளார்

`வெளிவிட்டேன் உன்செயல் வெறுத்திடா துன்னருள் 
வெளிவிட் டெனைக்கா அருணாசலா’

என்பது இதைத் தெளிவு படுத்தும் பாடல்

பெரும்பாலான சமயங்களில் பகவான் கண்டிப்பில்லாத, சகிப்புத் தன்மை மிக்க, எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் ஒரு தந்தை போலவே காணப்படுவார். நமது வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் குறித்த அவரது அறிவுரைகளை நாம் பின்பற்றாவிட்டால், சிறிது காலத்திற்கு அவர் நம்மை நம் போக்கிற்கே விட்டு விடுவது போல் தோன்றும். சில சமயம் அவர் நாம் செய்யும் சில தவறுகளையும் அங்கீகரித்தது போலவும் தோன்றும். ஆனால் மெதுவாக சரியான சமயம் வாய்க்கும் போது, நம்மை அவர் தமது வழிக்கே திருப்பி விடுவார்
அண்ணாமலை ஸ்வாமி கேட்ட ஒரு கதை: ஒரு கிராமத்தில் ஒரு பணக்காரன் வாழ்ந்து வந்தான். தன் நேரத்தையெல்லாம் செல்வம் திரட்டுவதிலேயே ஈடுபட்டான். அவனுக்கு எண்ணிக்கையில்லாத அளவு நிலமும் வீடுகளும் இருந்தன. ஒரு நாள் பொழுதுபோகாமல் ஒரு குச்சியைக் கையில் பிடித்தபடி வீட்டு வாயிலில் அமர்ந்திருந்தபோது தெருவில் நடந்து கொண்டிருந்த ஒரு அப்பாவி ஏழையுடன் விளையாட அவன் நினைத்தான். அவனை அருகில் அழைத்த போது, அவனும் `இது என்ன கையில் குச்சி' என்று கேட்டான். பணக்காரன் குறும்புடன் `இது ஒரு மாயக் குச்சி. பல கைகள் மாறி எனக்கு வந்திருக்கிறது. இதை வாங்கிக்கொள்ளும் ஒருவன் தன்னை விட முட்டாளுக்கு இதைக் கொடுக்க வேண்டும். அவனும் மறுக்கக் கூடாது. இந்தா பிடி. நீ தான் இப்போது என்னை விட முட்டாள்' என்று சொல்லிக் கொடுத்தான். 

அந்த ஏழையும் அடக்கத்துடன் அந்த குச்சியைப் பெற்றுக் கொண்டான். அன்றிலிருந்து தன்னை விட முட்டாள் அந்த கிராமத்தில் இருக்கிறானா என்று தேட ஆரம்பித்தான். எவ்வளவு தேடியும் தான் தான் கடை நிலையில் இருக்கிற முட்டாள் மாதிரி அவனுக்குத் தோன்றியது. அதனால் தானே அதை வெகு நாட்கள் வைத்திருந்தான்

பணக்காரன் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருணம் வந்தது. `இந்த வம்பே வேண்டாம். அவன் இறக்கு முன் அவனைப் பார்த்து குசலம் விசாரித்து விட்டு `நான் எவ்வளவு தேடியும் வேறு ஒரு முட்டாள் எனக்குக் கிடைக்கவில்லை. இந்தா பிடி நீ கொடுத்த குச்சி' என்று சொல்லிக் கொடுக்கலாம் என்று நினைத்துச் சென்றான்

பணக்காரனோ சாகும் தருணத்திலும் 
பணத்தைப் பற்றியும் தன் செல்வாக்கைப் பற்றியும் அவனிடம் பேசினான். ஏழை சட்டென்று அவன் கொடுத்த குச்சியை அவன் தலை மாட்டிலேயே வைத்தான். `சத்தியமாக என்னைவிட நீ தான் முட்டாள். சாகும் நேரத்தில் ஒரு துரும்பு கூட உன்னுடன் வர இயலாத சொத்தைப் பற்றிக் கவலைப்பாட்டுக் கொண்டிருக்கிறாய். இந்த கிராமத்தில் வேறு யாரும் இப்படி இல்லை.' என்று சொல்லியபடி வெளியேறினான்.  

இன்னொரு கதை. ஒரு மாணவன் தன் குருவைப் பற்றி ஒரு விசித்திரமான கருத்தைக் கூறினான். அவன் தன் குரு ஒரு குப்பைக் குவியல் என்றும் தான் ஒரு கோழி என்றும் குறிப்பிட்டான். அதை விளக்குகையில், `சுறுசுறுப்பாகக் குப்பையைக் கிளரிக்கொண்டிருக்கும் வரையில் கோழிக்கு ஏதாவது தீனி கிடைக்கும். அது நின்று விட்டால் கோழி பட்டினி கிடக்க வேண்டியது தான்'. 


அண்ணாமலை சுவாமிகள் பகவானின் `உள்ளது நாற்பது' நூலின் நான்காவது பாடலைச் சுவையுடன் கூறுகையில் 


`அந்தமிலாக் கண்ணின்' மேன்மையை அதில் பகவான் ஆணித்தரமாகக் கூறுவார்

பகவான் அடிக்கடி சொல்லும் ஜனக மஹாராஜா அரண்மனை விபத்து, மற்றும் அவர் ஶுகருடன் செய்த சம்பாஷணை இவற்றை அண்ணாமலை சுவாமிகளும் இந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார். திடீரென்று ஒரு நாள் ஜனகரின் அரண்மனை தீப்பற்றி எரிந்ததாம். ஜனகர் கவலைப்படாமல் தொடர்ந்து தியானத்தில் இருக்க, அருகில் இருந்த முனிவர்கள் குடிலில் ஒரே கசமுஸாவாம். அவர்கள் தங்கள் தண்டங்களையும் கமண்டலம், கோவணம் என்று உடைமைகளைப் (?) பாதுகாக்க ஓடினராம்

இன்னொரு சமயம் சுக பிரம்மம் ஜனகரை குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டுகோள் விடுத்து வந்தாராம். `சரி, வருகையில் என்ன பார்த்தீர்?' என்று ஜனகர் கேட்டாராம். `கல்கண்டு வீடுகள். கல்கண்டு தெருக்கள். கல்கண்டு மரங்கள், மலர்கள், விலங்குகள். நீங்களும் கல்கண்டு. நானும் கல்கண்டு. கல்கண்டை கல்கண்டு பார்த்தது' என்றாராம் ஶுகர். `நீர் ஏற்கனவே ஞாநி. பக்குவப் பட்ட ஜீவன். உங்களுக்கு வேறு ஒரு குரு இனி தேவையில்லை' என்றாராம் ஜனகர்

1930களில் அண்ணாமலை சுவாமிகளின் தந்தை இறந்தார். யாரோ ஆசிரமத்தில் அண்ணாமலை ஸ்வாமிகளை தலை முழுகச் சொன்னார்கள். சுவாமிகள் சொன்னாராம்: `எப்போது இங்கே வந்தேனோ அப்போது முதல் என் தந்தை பகவான் தான். இப்போது இறந்தவர் என் முற்பிறவியின் தந்தை. அதற்குப் போய் நான் ஏன் தலை முழுக வேண்டும்?' 

சாதாரண மனிதர்கள் லௌகீகக் கவலைகள் கொள்வதை `ஐயோ, என் மனைவி விதவை ஆகி விட்டாள்' என்று புலம்பித் திரியும் ராம தீர்த்தரின் கதையாக சுவாமிகள் சுவையாகக் கூறுவார். கூடவே சொல்வார்: `உலகியலில் நான் தகுதி மிக்கவன் என்று நாம் நிரூபிக்க வேண்டும். பக்தி செய்ய இது தேவையில்லை. `நான் எந்தத் தகுதியும் இல்லாதவன்' என்று மன்றாடினால் போதுமானது






கருத்துகள் இல்லை:

பகவான் ரமணர் தன் கைப்பட வரைந்த திரு அருணை மலை. அருணாச்சல சிவ .அருணாச்சல சிவ . அருணாச்சல சிவ . அருணாச்சலா