புதன், 2 செப்டம்பர், 2020

 Courtesy: The sage of Kanchi 

ஜீவன் முக்தர்களின் சன்னிதி விசேஷம்

BY GANAPATHY SUBRAMANIAN on AUGUST 26, 2020 • ( 4 )

கீழ்க்கண்ட அனுபவங்கள் மகா பெரியவா, சிவன் சார், கோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் சன்னிதியிலும் ஏற்பட்டதை அவர்களுடைய பக்தர்கள் வாயிலாக நாம் கேட்டிருக்கிறோம். ஜீவன் முக்தர்களுடைய சன்னிதி விசேஷம் அது.

என். பலராம ரெட்டி

இவரைப் பற்றி: பலராம ரெட்டி, M.A (1908-95), ஆந்திரபிரதேசத்தின் ஆன்மிக சூழலுள்ள ஒரு கிராமத்தில் வளர்ந்தார். 1931ல் ஸ்ரீ அரபிந்தோ ஆஸ்ரமம் சென்ற இவர் 1937ல் ஸ்ரீ ரமணரின் பக்தராக ஆனார். My Reminiscences என்ற புத்தகம் ஸ்ரீரமணாஸ்ரமத்தில் இவரது வாழ்வு மற்றும் சாதனை ஆகியவைப் பற்றி விளக்குகிறது.

ஸ்ரீபகவானின் அவதாரம் இந்தப் பூமியை ஆசீர்வதிப்பதற்காக நிகழ்ந்தது. “அவரது கால்தடம் பட்டதும் பூமி தான் ஆசீர்வதிக்கப்பட்டதை உணர்ந்தாள்என்று பாகவதத்தில் ஒரு வரி வரும். என்னைப் பொருத்தவரையில் இந்த பூமிக்கு விஜயம் செய்த அற்புதமான பிறவிகளில் பகவான் ஒருவர். அவருடன் சேர்ந்து வசிக்கும் போது பூர்வ ஜென்மத்தில் நாம் செய்த புண்ணியத்தினால்தான் இப்பிறவியில் பகவானின் சேர்க்கை கிடைத்திருக்கிறது என்பதை உணரலாம். அவருடன் இருப்பது என்பது ஆகாயத்தில் இருப்பது போன்றது. அவருடன் பேச வேண்டாம். பேசி அவரிடமிருந்து எதையும் தெரிந்து கொள்ள முயலவேண்டாம். சூரியக் கதிர்கள் போல நிறுத்தாமல் அவர் அருள்மழை பொழிந்துகொண்டிருந்தார். இப்போது கூட உங்கள் பிரார்த்தனைகளுக்கு அவர் செவிசாய்ப்பார். உங்கள் பிரார்த்தனை உண்மையாக இருக்கும் பட்சத்தில்.

பகவான் தன்னுடைய அன்பினால் எப்படி எல்லோரையும் கட்டிப்போட்டிருந்தார் என்பதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. பகவானுக்கும் அவரது நெடுங்கால பக்தர்களுக்குமிடையே வார்த்தைகள் பரிமாற்றம் இருக்காது. இருந்தாலும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமான இப்பக்தர்கள் பகவானின் அருள் தங்கள் மீது பொழிவதை தெரிந்திருந்தார்கள். ஒற்றைப் பார்வையில், ஒரு தலை அசைப்பில், சின்ன விசாரணையில் பகவான் நம் மீது அக்கறையாக இருக்கிறார் என்று நேரடியாக இல்லையென்றாலும் இரண்டாமவர் மூலமாகவாவது ஒரு பக்தர் உணர்ந்துகொள்வார். அவரது முன்னிலையில் எல்லா ஏற்றத்தாழ்வுகளும் வித்யாசங்களும் தீர்க்கப்பட்டன.

பகவான் மிகவும் அனுகூலமானவர். அன்பிதயம் கொண்டவர். ஒவ்வொருவர் கண்களுக்கு அவர் ஒவ்வொரு விதமாக தெரிந்தாலும் தேடுபவர்களின் மீது தனிக் கவனம் எடுத்துக்கொண்டார். பகவானின் உதவியைப் பலமுறை பெற்றவன் நான்.

 

என்னுடைய குடும்பத்தின் நிலவிய ஒரு அசாதாரண சூழ்நிலையில் என்னுடைய கிராமத்திலேயே நான் எப்போதும் இருக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதாவது பகவானைவிட்டு நான் விலக வேண்டும். எனக்கு அந்தச் செய்தி வந்தவுடன் நான் நேரே பகவானிடம் சென்று நமஸ்கரித்து விவரத்தைச் சொன்னேன். கேட்டுக்கொண்ட பகவான் தலையை ஆட்டினார். அந்த தலை அசைப்பிற்கான அர்த்தம் என்னுடைய அம்மாவிடமிருந்த வந்த கடிதத்தைப் பார்த்ததும்தான் புரிந்தது. அந்தக் கடிதத்தில் என் அம்மா தானே அந்த விஷயங்களைப் பார்த்துக்கொள்வதாகவும் பகவானை விட்டு நான் பிரியவேண்டாம் என்றும் எழுதியிருந்தார். என்னுடைய் உலகவாழ்க்கையில் இது ஒரு திருப்புமுனை. இது சந்தேகத்திற்கே இடமில்லாமல் பகவானின் நேரடி அருளினால் கிடைத்தது.

நான் திருவண்ணாமலைக்கு ஜாகை மாற்றியிருந்த வருஷம் அறையில் நான் உட்கார்ந்திருக்க பகவான் ஒரு குறிப்பிட்ட ஆன்மிக செய்தியை என்னிடம் விளக்கிக்கொண்டிருந்தார். அந்தப் பேச்சின் இடையில் பகவான் அறையில் இருந்த அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வரச் சொன்னார். அந்தப் புத்தகத்தை அலமாரியில் கண்டுபிடிக்க முடியாமல் மீண்டும் பகவான் எதிரே வந்து அவர் முகத்தைப் பார்த்து அமர்ந்துகொண்டேன். பகவான் எழுந்தார். கம்பீரமாக அந்த அலமாரியை நோக்கி மெதுவாக நடந்து சென்று ஒரே கணத்தில் அந்தப் புத்தகத்தை எடுத்தார். அலமாரியை மூடிவிட்டு நடந்து வந்த அவர் என்னை ஆச்சரியப்படுத்தும்படி தனது இருக்கையில் அமராமல் என் பக்கத்தில் வந்துத் தரையில் என்னோடு உட்கார்ந்துகொண்டார்.

fvgஅfdந்bதxப் புத்தகத்தைப் பிரித்து என் முகத்துக்கு நேரே காட்டி ஒரு குறிப்பிட்ட பத் தியைப் படிக்கச் சொன்னார். பகவானின் உதவியாளர்கள் அவரது சரீரம் அடுப்பு போலக் கொதிக்கும் என்பார்கள். என் பக்கத்தில் அவர் அமர்ந்தபோதுதான் என்னால் அதை உணர முடிந்தது. மின்சார டைனமோ போல அவரிடமிருந்து ஆன்மிக சக்தி பெருகுவதை உணர்ந்தேன். நான் அப்படியே ஆச்சரியத்தில் உறைந்துபோனேன்.

 

சத்தியமானது பகவானது இருத்தலில் உறைந்து போய் அவர் நம் முன்னிலையில் இருக்கும் போது நமக்குள் அதிரடியான மாற்றத்தை உண்டுபண்ணுகிறது. அவரது தெய்வீக சக்தியானது அபாரமானது.

 

பகவானின் அறையில் குறிப்பிடத்தக்க ஏதோ ஒன்று இருப்பதாக எனக்கு எப்பவுமே உள்ளுணர்வில் இருக்கும். அறைக்குள் நாம் நடந்து சென்று அவர் முன்னால் அமரும் போது நம்முடைய இருத்தலின் வேறு ஒரு வித்தியாசமான பரிமாணத்தை அடைந்ததாக உணர்வோம். நமக்குத் தெரிந்த உலகம் மறைந்து போய் பகவானின் முன்னிலையில் அவரது உலகம் அந்தச் சூழலை மூடிக்கொள்ளும். அந்த அறையை விட்டு வெளியேறிய பின்னர் மீண்டும் நமக்குத் தெரிந்த அந்த பழைய உலகத்தில் சஞ்சரிப்பதை உணர்வோம்.

 

நிஜத்தில் எப்போதும் சுயத்தில் விழித்திருந்தாலும் பொதுவாக பகவான் தூங்குகிறாரா விழித்திருக்கிறாரா என்று சொல்ல முடியாது. அவர் எப்படி இந்த தடையற்ற பிரபஞ்ச விழிப்புணர்வில் இருந்துகொண்டு இந்த எல்லைக்குட்பட்ட ஸ்தூல சரீரத்துடன் செயல்பட்டார் என்பதே ஒரு மிகப்பெரிய ஆச்சரியம். அந்த நிலை நமக்குப் புரியாது. அந்த மகோன்னதமான நிலையிலிருந்து நம் நிலைக்கு இறங்கி வந்து நம்மோடு பேசிக்கொண்டிருந்தார். ஆஸ்ரமத்தின் செயல்பாடுகளுக்கும் பார்வையாளர்களின் தங்கும் வசதிக்கும் கூட கனிசமான அளவில் செயல்பட்டார்.

 

அவரது செயல்கள் இயற்கையாகவும் சரளமாகவும் இருக்கும். அவரைப் பார்த்தே நாம் இவ்வுலகத்தில் எப்படி வாழ்வு என்று அறிந்துகொண்டோம். அவரது உதாரணங்களே பெரும் போதனை அவரது தெய்வீக இருத்தலே நாம் வாழ்நாள் முழுவதும் கடும் முயற்சியோடு செய்த சாதனைகள் தரும் பலன்களைக் காட்டிலும் பெரிதாக இருக்கும். அவரைப் பற்றி சிந்தித்தாலோ அல்லது அவர் முன்னால் வெறுமேனெ அமர்ந்தாலோ அதுவே நம்மை சிறப்பாக ஆசீர்வதிக்கப்பட்ட நிலைக்குக் கொண்டு செல்லும்.

 

மனித இனத்தின் பலவீனத்தை அறிந்துகொண்டு அதில் நாம் மூழ்கிவிடாமல் கடந்து செல்வது எப்படி என்பதைப் போதிப்பதில் உறுதியாக இருந்தார்.

 

பகவானின் மொத்த வாழ்வுமே இந்த உலகிற்காக அர்ப்பணிக்கப்பட்டது. அவர் செய்த எல்லாமே பிறத்தியாருக்காகத்தான். இந்த புத்தி மனசு நான்கிற அகங்காரம்தான் நாம் என்று தப்பர்த்தம் செய்துகொண்டிருந்த நம்மை அதிலிருந்து ஆன்மவிடுதலை அளிக்க விரும்பினார். இதற்காக அவர் ஆத்ம விசாரம் என்ற முறையை நமக்கு அளித்து அதை செயல்படுத்துவது எப்படி என்று பயிற்றுவித்தார். அவரது இருத்தல் மற்றும் அருளின் மூலமாக தேடுபவர்களுக்கு பயனுள்ள உதவிகளை வழங்கினார்.

 

ஒரு நாள் பகவான் பிறத்தியார் பிணி தீர்ப்பதற்காக ஆஸ்ரம மருந்து வளாகத்தின் அருகே நின்றுகொண்டிருந்தார். அவரது படுக்கையின் அருகே நின்று கொண்டிருந்த நான் என் கண்களை அவர் மீது படரவிட்டேன். எங்கள் இருவருக்குமிடையில் வார்த்தைகள் எதுவும் பரிமாறப்படவில்லை. ஆனால் அவரது குளிர்ச்சியான கருணை பொழியும் கண்கள் என் மீது அன்பையும் அமைதியையும் பொழிந்ததை என்னால் எப்போதும் மறக்கமுடியாது. இதைப் படிப்பவர்களை இது ஒரு சிறிய நிகழ்ச்சியாகத் தெரியலாம். ஆனால் கணக்கிடமுடியாத அமைதியும் அருளும் தோய்ந்த அந்த ஒரு பார்வையில் அவரது அருள் எப்போதும் என்னுடனிருக்கிறது என்ற பாதுகாப்பும் நம்பிக்கையும் பிறந்தன. அவர் ஸ்தூல சரீரத்தை விட்ட நாற்பது வருடங்களுக்குப் பிறகும் இப்போதும் அதே அருள் என் மீது பாய்ந்து என்னைச் சூழ்ந்து வழிநடத்துவதாக உணர்கிறேன். அதை எப்படி வார்த்தைகளால் விவரிக்கமுடியும்?

 

ஓரு முறை புதுச்சேரி ஆளுநரின் தனிச் செயலர் நிறைய விளக்கமான கேள்விகளை பிரெஞ்சில் எழுதிக்கொண்டு வந்திருந்தார். அந்தக் காகிதத்தை பகவான் கையில் கொடுத்துவிட்டு அவரது படுக்கைக்கு எதிரில் இருக்கும் ஜன்னலில் அமர்ந்துகொண்டார். பிரெஞ்சில் கேள்விகளைப் பார்த்ததும் பகவான் என்னை மொழிமாற்றம் செய்யச்சொன்னார். [பலராம ரெட்டி ரமணாஸ்ரமம் வருவதற்கு முன்பாக பிரெஞ்ச் ஆளுகையில் இருந்த புதுச்சேரியில் அரபிந்தோ ஆஸ்ரமத்தில் நிறைய வருஷங்கள் இருந்ததால் பிரெஞ்சு மொழியில் ஓரளவு தேர்ச்சிபெற்றிருந்தார்]

 

வார்த்தைக்கு வார்த்தை பிரெஞ்சு மொழியிலிருந்து மொழிமாற்றம் செய்ய நான் திணறுவதைக் கண்ட பகவான்.

 

அப்படியெல்லாம் வேண்டாம். சுருக்கமாச் சொல்லுஎன்றார்.

 

நான் கேள்விகளை ஒரு முறை பார்த்துவிட்டு அவர் அந்தக் கேள்விகளுக்கு வார்த்தைப்பூர்வமாக பதில்களை எதிர்ப்பார்க்கவில்லை என்று அனுபவப்பூர்வமான பதிலை எதிர்பார்க்கிறார் என்றும் சொன்னேன்.

 

பகவான் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பின்னர் தனது முகத்தை மெதுவாகத் திருப்பி கேள்வி கேட்டவரின் மீது கண்களைப் படரவிட்டார். முப்பது விநாடிகள் கழிந்திருக்கும். கேள்வி கேட்டவரின் மேனி நடுங்க ஆரம்பித்து உதற ஆரம்பித்துவிட்டது.

 

பகவானே! வேண்டாம்.. இப்ப வேண்டாம்! தயவு செய்து பகவானே! இப்ப வேண்டாம்என்று உளற ஆரம்பித்துவிட்டார்.

 

நான் பகவானுக்கு அருகில் நின்று இந்த அசாதாரணமானக் காட்சியைப் பார்த்து பகவான் எவ்வளவு பெரிய அற்புதப் பிறவி என்று அதிசயப்பட்டுக்கொண்டிருந்தேன். அவர் சக்தியின் களஞ்சியம். இருந்தாலும் நம் மீது அன்பும் மென்மையு கருணையும் கொண்டிருக்கிறார்.

 

1950ம் வருஷ துவக்கத்தில் மெட்ராஸ் அரசின் மந்திரி சீதாராம ரெட்டி ஆஸ்ரமத்திற்கு வந்திருந்தார். நிர்வாகம் என்னை அழைத்து மந்திரியை பகவான் இருக்கும் நிர்வாண அறைக்குக் கூட்டிச் செல்லச் சொன்னது. பகவான் முன்னிலையில் நாங்கள் உள்ளே நுழையும் போது வித்தியாசமான ஒரு கதிரொளி அல்லது மெல்லிய ஒளி அந்த அறைக்குள் என் கண்ணில்பட்டது. பகவான் மீது எனக்குள்ள பக்தியினால் அப்படித் தெரிகிறது என்று நான் நினைத்தேன். அறையை விட்டு நாங்கள் வெளியே வந்த பிறகு மந்திரி என்னைப் பார்த்துக் கேட்டார்.

 

மகரிஷியின் அறையில் அது என்ன ஒரு கதிரொளி?”

 

எனக்கு உடனே கணபதி முனியின் சத்வாரிம்சத்லிருந்து இரண்டாவது பாடல் நினைவுக்கு வந்தது.

 

ரத்னங்கள் குவிந்துள்ள கடல் போல உயர்குணங்கள் மிகுதியாக நிறைந்தவர். மேகத்தினால் மறைக்கப்பட்ட சூரியனைப் போல சாதாரண மனித சரீரத்தில் பேரொளியைக் கொண்டவர்.”

 

எனது வாழ்வின் பல நிகழ்வுகளில் மஹரிஷியின் வழிகாட்டுதல் இருப்பதை நான் நம்புகிறேன். அவரைக் குருவாக வரித்து சரணாகதி அடைந்தது என் வாழ்வில் நானெடுத்த முடிவுகளில் சிறந்ததாகும்.

 

கருத்துகள் இல்லை:

பகவான் ரமணர் தன் கைப்பட வரைந்த திரு அருணை மலை. அருணாச்சல சிவ .அருணாச்சல சிவ . அருணாச்சல சிவ . அருணாச்சலா