காராய வண்ண மணிவண்ண
கண்ண
கனசங்கு சக்ர தரநீள்
சீராய தூய மலர்வாய
நேய ஸ்ரீராம ராம
வெனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு
சூழ்க தாமோத ராய
நமவோம்
நாராய ணாய நமவாம
னாய நமகேச வாய
நமவே.
உரை:
கார்மேகத்தையும் நீலமணியையும் போன்ற நிறத்தையுடைய கண்ணனே,
பெருமையுடைய சங்கு சக்கரங்களை ஏந்துபவனே,
சீர்மையையுடைய தூய மலர் நிகரும்
வாயையுடையவனே, அன்பனே, சீராமராம என்று
பரவுவதே ஒழுங்குடைய வாழ்வை யளிக்குமாதலால், ஓம்
தாமோதராய நம, நாராயணாய நம,
வாமனாய நம, கேசவாய நம
என்று, நெஞ்சே நீ நினைப்பாயாக.
எ.று.
காராய வண்ணம் - கார்
மேகத்தைப் போன்ற நிறம். கார்
வண்ணம் மேனி நிறத்திற்கும், மணிவண்ணம்
மேனி யொளிக்கும் உவமம். மணி - நீலமணி.
கண்ணன் - கரியவன். கருங்கதிர் விரிக்கும் திருமேனியுடைய கண்ணன் என்பதாயிற்று. கனம்
- பெருமை. ஒரு கையிற் சங்கும்
ஒரு கையிற் சக்கரமும் ஏந்துதலால்
“சங்கு சக்கரதரன்” என்று உரைக்கிறார். இவ்விரண்டையும்
பெரியாழ்வார், “வடிவார் சோதி வலத்துறையும்
சுடராழியும் பல்லாண்டு, படையோர் புக்கு முழங்கும்
அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டு” (1 : 1) எனச் சிறப்பிப்பர். பாஞ்ச
சன்னியம், கண்ணன் ஏந்தும் சங்குக்குப்
பெயர். இதழ் ஒடியாமல் சீர்மையுடன்
விரிந்த செந்தாமரை மலர் போன்ற வாய்
என்றற்குச் “சீராய தூய வாய்”
என்று குறிக்கின்றார். நேயம் - அன்பு. துயர்
செய்த அரக்கரிடத்தும் அன்பு செய்தது பற்றி,
“நேய சீராம” எனப் பராவுகின்றார்.
உலகியலிற் பற்பல பொருள்களை நினைந்து
அலமருதலை விடுத்துச், சீராமராம என நினைக்கின், தாராய
வாழ்வை அந்நினைவு தரும் என்றற்குச் “சீராம
ராம எனவே தாராய வாழ்வு
தரும்” என்று இயைக்க. அறநெறிப்பட்ட
ஒழுங்கமைந்த வாழ்வைத் “தாராய வாழ்வு” என்கின்றார்.
தார் - ஒழுங்கு. நெஞ்சே எனற்பாலது, நெஞ்சு
என வந்தது அண்மை விளி.
சூழ்தல், நினைத்தல். தாமோதரனே, நாராயணனே, வாமனனே, கேசவனே உனக்கு
வணக்கம். சீராமராம என்பதோடு ஓம் தாமோதராய நம,
ஓம் நாராயணாய நம, ஓம் வாமனாய
நம, ஓம் கேசவாய நம
என்று கூறியது, நெஞ்சுக்கு நினைக்கும் நெறி காட்டியவாறு. ஓம்
தாமோதராய நம என்பது முதலாக
வருவன வடமொழியால் வழிபடும் திறம்.
இதனால் சீராம நாமத்தை
நினைந்து ஓதும் முறையும், ஓதிய
வழி எய்தும் பயனும் தெரிவித்தவாறாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக