சனி, 21 ஏப்ரல், 2018

Bhagavan's multi linguistic talent

பன்மொழியறிவு ( 29 – 10 – 1947 )
*************************
இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நான் ஆச்ரமம் சென்றபொழுது பகவான் ஒரு மலையாளப் புத்தகம் படித்துக் கொண்டே அருகிலிருந்த ஒரு பக்தரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
‘ சிறு வயதிலேயே பகவான் மலையாளம் படிக்கக் கற்றுக் கொண்டீர்களா ? ’ என்று கேட்டார் அந்த பக்தர்.
“ ஊஹீம் , நான் குருமூர்த்தத்திலிருந்தபோது பழனி சுவாமி என்னுடன் , இருந்தானில்லையா ? அவன் மலையாள ‘ அத்யாத்ம ராமாயண ’ த்தைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு அதைப் பிரிப்பதும் படிப்பதுமாக இருப்பான். படிக்கத் தெரிந்த ஒவ்வொரு மலையாளியும் அந்தக் கிரந்தத்தைத் தவறாமல் படிப்பான். அதனால் பழனிசுவாமிக்கு சரிவரப் படிக்க வராவிட்டாலும் தப்புத்தப்பாகவே ஒரு வழியாகப் படிப்பான். நான் அப்பொழுது மௌனத்தில் இருந்ததால் பேசாமல் கேட்டுக் கொண்டிருப்பேன். மாந்தோப்புக்கு இடம் மாறியபின் ஒருநாள் நான் அந்தப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தால் எல்லாம் கிரந்தாக்ஷரம் போலவே இருந்தது. எனக்கு முன்னதாகவே கிரந்த லிபி தெரிந்திருந்தபடியால் மலையாளம் சுலபமாகவே எழுதுவதற்கும் படிப்பதற்கும் கற்றுக் கொண்டேன் , ” என்றார் பகவான்.
‘ தெலுங்கு படிக்க எப்பொழுது கற்றுக் கொண்டீர்கள் ’ என்று இன்னொருவர் கேட்டார். “ விருபாக்ஷ குகையிலிருக்கும் போது கம்பீரம் சேஷய்யர் ஏதாவது சுலோகங்களைத் தெலுங்கில் எழுதிக் கொடுக்கச் சொன்னால் புத்தகத்தில் எழுத்துக்கெழுத்து பார்த்துப் பார்த்து எழுதிக் கொடுப்பேன். அப்படியே படிப்படியாகப் பழக்கமாகிவிட்டது. 1900 – ம் வருஷத்திலேயே படிக்க எழுத வந்து விட்டது ” என்றார் பகவான்.
‘ தேவநகரி லிபி கற்றுக் கொண்டது எப்பொழுது ? ’ என்று நான் கேட்டேன். “ அதுவும் அந்தக் காலக்கட்டத்தில்தான். முத்து , யக்ஞராம தீக்ஷிதர் முதலியவர்க ளெல்லோரும் அப்போது வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் தேவநகரி லிபியில் புத்தகங்க ளிருந்தன. அவைகளைப் பார்த்துப் பார்த்து எழுதுவேன். அப்படியே பழக்கமாகிவிட்டது ” என்றார் பகவான். ‘ நாயனா ( கணபதி முனி ) வந்தபிறகு கற்றுக் கொண்டதாக கேள்விப்பட்டோமே ? ’ என்றார் மற்றொருவர்.
“ ஊஹீம். இல்லை , அவர் வந்தபின் தெலுங்கு சரளமாகப் பேச வந்தது. அவ்வளவுதான் ” என்றார் பகவான்.
‘ தெலுங்கு சிறுவயதிலேயே கற்றுக் கொண்டதாகக் கேள்விப்பட்டோமே ’ என்றார் மற்றொருவர். “ அப்பொழுது எழுதப் படிக்க வராது. எங்கள் சின்ன தாத்தாவிற்குத் தெலுங்கு தெரியும். அவர் என்னைப் பக்கத்தில் படுக்கையில் வைத்துக் கொண்டு ‘ க கு தீர்க்கமிஸ்தே கா ’ ( ‘ க ’ வை நீட்டினால் ‘ கா ’ ) என்று சொல்லிக் கொடுப்பார். அவ்வளவுதான். பிறகு சுலோகங்களை எழுதிக் கொடுத்தே எழுதக் கற்றுக் கொண்டேன். ‘ உபதேச சாரம் ’ எழுதியபோது ராமயோகி ( யோகி ராமய்யா ) தெலுங்கிலும் எழுத வேணுமென்றதால் தமிழ்ச் சந்தத்தையொட்டி சில ஈரடிச் செய்யுள்களெழுதி நாயனாவுக்குக் காட்டினேன். அவர் ‘ ஐயோ , இது தெலுங்கு த்விபதமில்லையே ? இது தமிழ் சம்பிரதாயம்தான் ’ என்று சொல்லி தெலுங்கு த்விபதச் சந்தத்தின் கணங்களைச் ( சந்த அமைப்பு முறைகளை ) சொன்னார். அந்தக் கணங்களை யொட்டி தமிழில் ஒரு சின்ன சூத்ரமெழுதி வைத்துக் கொண்டேன். அதை யனுசரித்துக் கொஞ்சம் மாற்றி யெழுதினால் தெலுங்கு த்விபதம் வந்துவிட்டது. அதை நாயனாவுக்குக் காட்டினேன். ‘ ஆ ! இப்போ சரியாக இருக்கு ’ என்று சொல்லி அதில் திருத்த மேதும் செய்யாமல் , ‘ இப்படியே அச்சுப் போட்டு விடலாம் ’ என்றார். அதன் பின் பலராம ரெட்டி ‘ சுலக்ஷணசாரம் ’ ( தெலுங்கு ‘ சந்தோலக்ஷணம் ’ நூல் ) கொண்டு வந்து கொடுத்தார். அதைப் பார்த்து மீதியுள்ள விருத்தங்களின் லக்ஷணங்கள் எல்லாம் சுருக்கமாக இரண்டு பக்கங்களி லெழுதி ‘ பெத்த பால சிக்ஷை ’ ( சிறுவர் தெலுங்குப் பாடநூல் ) யில் ஒட்டி வைத்துக் கொண்டேன். என் தேவைக்கு அதுவே போதுமானதாகி விட்டது. இப்போது யாரேனும் பத்யம் படித்தால் , இது எந்த வகையான பத்யம் , தப்பு எங்கே என்று சுலபமாகக் கண்டுபிடிக்க முடிகிறது. ஒவ்வொரு பாஷையும் இதுபோலவே பழக்கமாயிற்று. வேணுமென்று எந்த பாஷையும் கற்றுக் கொள்ளவில்லை ” என்று கூறி முடித்தார்.
ஸ்ரீ ரமணாஸ்ரமத்திலிருந்து கடிதங்கள் – 2 லிருந்து ஒரு பகுதி.

கருத்துகள் இல்லை:

Pradosha mama's voice, courtesy sage of kanchi site

https://mahaperiyavaa.blog/2024/02/02/ithanai-yamatrai-mahaperiyava-karavalambam-in-sri-pradosham-mamas-voice/