பக்தி தவழும் பவளக்குன்று:
பவளக்குன்று: திருவண்ணாமலை செல்லும் போது, அண்ணாமலையார் ஆலயம், ரமணாஷ்ரமம் ஆகியவற்றோடு மறக்காமல் அருகில் உள்ள பவளக்குன்றுக்கும் சென்று வாருங்கள். ஐந்து நிமிடத்தில் படியேறி விடலாம்.
பகவான் ரமணர் தன் முதல் உபதேசத்தை (`அவரவர் பிராரப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பன். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆகலின் மௌனமாய் இருக்கை நன்று.') அன்னை அழகம்மைக்கு1899 ல் அருளிய புண்ணிய இடம் இது. குன்றின் மேல் அழகிய ஆலயம் இருக்கிறது. பார்வதி தேவி, இந்தக் குன்றில் தான் தவம் இருந்து அருணாசலேசுவருடன் ஐக்கியமானார். கௌதம முனிவர் தவம் செய்ததும் இந்தக் குன்றில் தான்.
சிவபெருமான், முத்தாம்பிகை, கணபதி, வள்ளி, தேவசேனாவுடன் முருகன், அர்த்தநாரீஸ்வரர் ஆகியோருக்கு இங்கே சன்னதி இருக்கிறது. ஆலய நேரம் காலை 7.30-9, மாலை 5.30-6.30.
ஆலயம் திறக்காத நேரத்தில் நீங்கள் சென்றால் கூட , அமைதி தவழும் பிராகாரத்தில் மரத்தடியில் சும்மா கண்களை மூடி, ரமணர், தான் தாய்க்கு உபதேசம் செய்த இடம் இது தான், பகவானின் முதல் உபதேசம் நடந்தது இங்கே தான் என்பதை நினைத்துப் பாருங்கள். ஆனந்தம் அடைவீர்கள்.
நன்றி: குமுதத்தின் மாண்புமிகு மகான்கள்.