சாப்பிடும் முறை
ஆர்க்கும் இடுமின், அவர், இவர் என்னன்மின்,
பார்த்திருந்து உண்மின், பழம்பொருள் போற்றன்மின்,
வேட்கை உடையீர், விரைந்து ஒல்லை உண்ணன்மின்,
காக்கை கரைந்து உண்ணும் காலம் அறிமினே
நூல்: திருமந்திரம் (அறம் செய்வான் திறம்)
பாடியவர்: திருமூலர்
முதலில், நாம் சமைத்த உணவை நாம் மட்டுமே சாப்பிடவேண்டும் என்று நினைக்கக்கூடாது. காக்கைகள் சாப்பிடுமுன் தன்னுடைய கூட்டத்தை அழைத்து, கிடைத்த உணவை அவற்றுடன் பகிர்ந்துகொள்கிறதல்லவா? அந்தக் குணத்தை நாமும் கற்கவேண்டும். ஆகவே, சமையல் தயாரானதும் சட்டென்று உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கிவிடக்கூடாது. யாராவது இரவலர்கள் வருகிறார்களா என்று பார்த்து, காத்திருந்து உண்ணவேண்டும்.
அப்படி இரவலர்கள் (beggars) நம் வாசலில் வந்து நின்றால், பசி என்று வந்த அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உணவு இடவேண்டும். அவர் ஏழையா, பணக்காரரா, முதியவரா, இளையவரா, ஆணா, பெண்ணா, எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்றெல்லாம் பேதம் பார்க்காமல் உணவை வழங்கவேண்டும்.
அடுத்து, சாப்பாட்டைச் சரியானமுறையில் சமைத்து, அது கெட்டுப்போவதற்குள் சாப்பிடவேண்டும். பழைய, வீணானவற்றைச் சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல.
சில சமயங்களில், நாம் நிறையப் பசியோடு வீட்டுக்கு வருவோம். உடனே, பரபரவென்று அவசரமாக அள்ளித் தின்னக்கூடாது. எத்தனை பசியாக இருப்பினும், நன்கு மென்று சாப்பிடுவதுதான் முறை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக