திங்கள், 18 ஏப்ரல், 2022

 

சமாதியும் சரீரமும்


(28-4-22 பகவான் ரமணரின் ஆராதனை தினம்)


தியானத்தில் சமாதி நிலை என்றால் என்ன என்பதை பகவான் இந்தக் கலி காலத்திலேயே காட்டியிருக்கிறார். திரு அருணை பாதாள லிங்கத்தில் அவர் தன் மேல் புற்று மண்டியிருந்தது கூடத் தெரியாமல் பல நாட்கள் த்யானத்தில் இருந்ததைச் சொல்லலாம். அவர் ஊண் உறக்கம் இன்றிப் பல நாட்கள் தவமியற்றுவது பொறுக்காத ஒரு பெண்மணி அவரை எழுப்பி அமுது ஊட்ட முயன்று முடியாமல் ஒரு கைப்பிடி அன்னம் அவர் வாயில் வலுக்கட்டாயமாய்த் திணித்து மறுநாள் வந்து பார்த்த போது உணவை விழுங்கும் உணர்வுமற்று அப்படியே வைத்திருந்தது போன்ற உதாரணங்களைச் சொல்லலாம்.

சமாதி நிலையில் நிலைத்திருத்தல் என்பதை பகவான் தன் பூத உடலுடன் இருந்த ஒவ்வொரு கணமும் நிரூபித்திருக்கிறார். இதைப் பற்றி குஞ்சு ஸ்வாமிகள் நினைவு கூறுகையில் ஸ்கந்தாஸ்ரமத்தில் அக்ஷர மணமாலை பாராயணம் செய்யும் நேரத்தில் பகவான் பல முறைகள் சிலை போல் அமர்ந்திருப்பார் என்கிறார். 'பாராயணம் மாலை 6.30 மணிக்கு ஆரம்பித்தால் 7.30 மணிக்கு முடியும். இரவு உணவு செல்ல சரியாக இருக்கும். ஆனால் பகவான் பலமுறை த்யானத்திலிருந்து மீள மாட்டார். சில நாட்கள் 9 மணி அல்லது அதற்கு மேலும் ஆகும். பகவான் இல்லாமல் பக்தர்கள் சாப்பிட முடியாதாகையால் பெருமாள் சுவாமி, அகண்டானந்தா, மஸ்தான் சுவாமி போன்றோர் மாற்றி மாற்றி சங்கு ஓதுவார்கள். தண்டபாணி சுவாமி மிருதுவாக பகவானின் காலைப் பிடித்து விடுவார். வெகு நேரம் பொறுத்து கண் திறப்பார். யோக வசிஷ்டத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ப்ரஹ்லாதனை அப்படி சங்கு ஊதி எழுப்புவது சொல்லப்பட்டிருக்கிறது.



"கொம்பைச் சுற்றிய மாலை நழுவுவதையோ அல்லது இருப்பதையோ அறியாத பசு போல், இடுப்பில் சுற்றிய துணி இருக்கிறதா இல்லையா என்று அறியாத குடி வெறியன் போல், ஒரு ஞானி சரீரம் இருக்கிறதா இல்லையா என்று அறிய மாட்டான்." என்கிறார் பகவான்.

ஒரு வெளி நாட்டினர் திருவருணையில் ஒரு நாள் ரமண ஆஸ்ரமம் அருகில் ஒரு யானையைப் பாகன் அழைத்துத் தெரு வழியாக செல்வதைப் பார்த்து யானையை "ஆத்மா அறியாத சரீரம்" என்றும் பகவானை "சரீரம் அறியாத ஆத்மா" என்றும் வர்ணித்தது பகவான் போன்ற தவ ஞானிகளுக்கு முற்றிலும் பொருந்தும்.



தொகுப்பு

ஸ்ரீதர் சாமா

கருத்துகள் இல்லை:

பகவான் ரமணர் தன் கைப்பட வரைந்த திரு அருணை மலை. அருணாச்சல சிவ .அருணாச்சல சிவ . அருணாச்சல சிவ . அருணாச்சலா