மார்ச் 13 , 1935
கேள்வி : இறந்தவர்களை நாம் காண முடியுமா ?
பகவான் : ஆஹா ! முடியும்.
கேள்வி : யோகிகள் அவர்களை நமக்குக் காண்பிக்க முடியுமா ?
பகவான் : காண்பிக்கலாம். ஆனால் என்னிடம் அதைக்கேட்டு விடாதீர்கள். அது போன்றவைகளில் நான் ஈடுபடுவதில்லை.
கேள்வி : தங்களால் அவர்களைப் பார்க்க முடியுமா ?
பகவான் : ஸ்வப்பனத்தில் சிலகால் பார்ப்பதுண்டு
கேள்வி : யோகத்தின் வழியே லக்ஷ்யத்தை அடையமுடியுமா ?
பகவான் : முடியும்.
கேள்வி : யோகத்தைப் பற்றி நூல்கள் எழுதியிருக்கிறீர்களா ?
பகவான் : ஆம். எழுதியிருக்கிறேன்.
கர்மமென்பது என்னவென்று ஒருவர் வினவினார்.
பகவான் : ஏற்கனவே இப்பிறவியிலேயே பயனைக் கொடுக்க ஆரம்பித்திருப்பதைப் பிராரப்தகர்ம மென்பர். இனிப் பயனைக் கொடுக்கக்கூடியதாய் எஞ்சியுள்ள கர்மத் திரளனைத்தும் சஞ்சித கர்ம மெனப்படும். நல்லது கெட்டது பலவிதம் அதிலிருக்கும். இப்பொழுது செய்யும் கர்மங்கள் சில இனிமேல் வரும் பிறவியிற் பயனளிப்பனவாம். அப்பகுதி ஆகாமி என வழங்கப்படும்.
கைங்கர்யம் செய்துவரும் பக்தரொருவர் ( ரங்கசாமி ) தாம் வந்த புதிதில் , “ எந்த வழியே போனால் முக்தியை அடையலாம் ? ” என்று கேட்டதற்கு , பகவான் முகமலர்ச்சியுடன் , “ வந்த வழியே ( திரும்பிப் ) போனால் முக்தியை அடையலாம். ” என்று விடையருளி ( அஹம் விருத்தியின் மூல நாட்டத்தை இவ்வாறு எளிதிற் கூறி ) அனுக்ரகித்தார்.
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் என்னும் நூலிருந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக