Mahaperiyava says:
Adwaitham & Atomic Science
காண்கிற உலகம் பலவிதமாக இருந்தாலும், ஒன்றேதான் இத்தனையும் ஆகியிருக்கிறது என்பதை நவீன ஸயன்ஸ் தெளிவாக ஒப்புக் கொண்டு நிலை நாட்டுகிறது. ஐம்பது வருஷங்களுக்கு முன் உலக வஸ்துக்கள் எல்லாம் எழுபத்திரண்டு மூலப்பொருள்களுக்குள் (Elements) அடங்குவதாக ஸயன்ஸ் சொல்லி வந்தது. இந்த மூலப்பொருள்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை என்பதே அன்றைய கருத்து. ஆனால், இப்போது அணு (Atom) பற்றி அறிவு விருத்தியான பின் இந்த மூலப்பொருள்கள் எல்லாமும்கூட வேறு வேறான பொருள்கள் அல்ல என்றும், ஒரே சக்தி (Energy) தான் இவை எல்லாமாகவும் ஆகியுள்ளது என்றும் ஸயன்ஸ் நிபுணர்கள் நிலைநாட்டியிருக்கிறார்கள். பொருள் (Matter) சக்தி (Energy) – இவையும் வேறானவை அல்ல என்று நவீன ஸயன்ஸ் சொல்லுகிறது. ஆக, அத்வைதம்தான் ஸயன்ஸும் நமக்குக் காட்டுகிற உண்மை. ஐன்ஸ்டைன், ஸர் ஜேம்ஸ் ஜீன்ஸ் போன்ற பிரபல ஸயன்ஸ் நிபுணர்கள் உபநிஷதமும் சங்கர பகவத் பாதாளும் உபதேசித்த அத்வைத சித்தாந்தத்துக்கு மிகவும் நெருங்கி வந்து விட்டார்கள்.
உலகம் மாயை என்று அத்வைதம் கூறுவதற்குப் பொருள் யாதெனில், ‘உலகம் இறுதி சத்தியமல்ல! இது விவகாரத்துக்கு மட்டுமே சத்தியம்; இதனுடைய இருப்பும் பிரம்மம் என்ற ஒன்றைச் சார்ந்ததே’ என்பதுதான்; இதையே மேற்சொன்ன ஸயன்ஸ் நிபுணர்களும் சொல்கிறார்கள். பிரம்மமே பாரமார்த்திக சத்தியம், உலகம் விவகாரிக சத்தியமே என்று அத்வைதம் சொல்வதைத்தான் இவர்கள் “உலக இயக்கமெல்லாம் இன்னொன்றைச் சார்ந்தவை (“relative”) தான்; முழு உண்மை (“absolute”) அல்ல” என்கிறார்கள்.
சக்தியும் பொருளும் ஒன்று என்ற பெரிய உண்மையைக் கண்ட அணு விஞ்ஞானிகள் அந்த அறிவைக் கொண்டே அணுகுண்டைக் கண்டுபிடித்தார்கள் என்பதுதான் துக்கமாக இருக்கிறது. வெளி உலக வஸ்துக்களைக் குறித்து ஸயன்ஸால் நிலைநாட்டப்படும் அத்வைதம் புத்தி மட்டத்தோடு நின்றதன் அனர்த்தம் இது. ஸயன்ஸின் அத்வைதம் வெறும் அறிவோடும், வெளி உலகத்தோடும் மட்டும் நிற்காமல் வெளி உலகத்துக்கு காரணமான உள் உலக உண்மையையும் ஆராய்ந்து, புத்தியோடு நிற்காமல், மக்களின் பாவனையிலும் தோய வேண்டும். ஜீவ குலம் எல்லாம் ஒன்றுதான் என்ற ஞானமும் ஸயன்ஸ் வழியாக ஏற்பட்டால், அணுகுண்டைத் தயாரித்த நவீன ஸயன்ஸே ஆத்ம ஹானிக்குப் பதிலாக மகத்தான ஆத்ம க்ஷேமம் செய்ததாகவும் ஏற்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக