PERIVA IN SRI SANKARA SARITHAM
உபகாரப் பணியிலும் அபகாரம்!
ஊர்
ஸமாசாரமெல்லாம் சொன்னேன். ஸொந்த ஸமாசாரமாக இரண்டு சொல்கிறேன் :
ஒரு ஊரில்
(ஸ்ரீமடத்தின் ஆதரவில்) அன்னதானம் செய்தது. ரொம்பப் பேர், ஏழைகள், வயிறாரச்
சாப்பிட்டு விட்டு, மனஸ் குளிர்ந்து
வாழ்த்திக்கொண்டு போனார்கள். (சமையல் வகைகள்) எல்லாம் நிறையப் பண்ணியிருந்தும்,
மூட்டை அரிசி வடித்திருந்தும், கொஞ்சங்கூட பாக்கியில்லாமல் எல்லாம் ஜனங்கள்
வயிற்றுக்குப் போச்சே என்று ரொம்ப த்ருப்தியாக இருந்தது. த்ருப்தி என்றால் என்ன?
‘நாமாக்கும்
பண்ணிவிட்டோம்’ என்ற ‘ஈகோ’தான்!
பாத்ரம், பண்டம் எல்லாம் தேய்த்து, அடுத்த ஊருக்குக் கிளம்பத் தயாராக இருந்த
ஸமயம். அப்போது ஒரு பத்துப் பதினைந்து ஏழை ஜனங்கள் — ஸ்தீரிகள், குழந்தைகள் உள்பட — லொங்கு லொங்கு என்று
ஓடிவந்து, “சோறு, சோறு” என்று கேட்க ஆரம்பித்ததுகள். எட்டு,
பத்து மைல் தாண்டி எங்கேயோ இருக்கிறவர்கள்.
அன்னதான ஸமாசாரம் அவர்கள் காதுக்கு லேட்டாகத்தான் போயிருக்கிறது. உடனே, பாவம், வெய்யிலில் அத்தனாம் தூரம் ஓடி வந்திருக்கிறதுகள்! இங்கேயானால் பருக்கை சாதம்
இல்லை! அண்டா, குண்டான் எல்லாம்
வண்டியிலே ஏற்றிக் கொண்டிருக்கிறது! அப்போது அவர்களுக்கு உண்டான ஏமாற்றத்தைச்
சொல்லிமுடியாது.
ஆயிரம்
பேருக்குப் போட்டு ஏதோ நாம் ப்ரமாத உபகாரம் பண்ணிவிட்டோமாக்கும் என்று
த்ருப்திப்பட்டது அத்தனையும் இந்தப் பத்துப் பதினைந்து பேருக்குப் பண்ணிய
அபகாரத்தில் ஓடியே போய்விட்டாற்போலிருந்தது!
ஏதோ பழம்,
கிழம் கொடுத்து, சில்லறை கொடுத்து, அவர்களை ஸமாதானம் பண்ணி அனுப்பிவைத்தது. அவர்கள் ஸமாதானமானார்களோ இல்லையோ,
இங்கே (தம்மையே குறிப்பிட்டு)
ஸமாதானமாகவில்லை!’ பாவம்! வயிறார நல்ல சாப்பாடு கிடைக்குமென்று இந்தப் படைபதைக்கிற
வெய்யிலில் இத்தனாம் தூரம் ஓடிவந்து குஞ்சும் குழந்தையும் பெண்களுமாக ஏமாந்து
போச்சுகளே!’ என்று தானிருந்தது!’ ஆயிரம் பேர் சாப்பிட்டுவிட்டும் போனார்களே
என்றால், நேற்றுவரைக்கும்
அவர்களுக்கு நாமா போட்டோம்? நாளைக்கு நாமா
போடப்போகிறோம்? அதே மாதிரி
இன்றைக்கும் அவர்கள் எப்படியோ வயிற்றைக் கழுவிக் கொண்டிருப்பார்கள். ஆனால்,
‘போடுகிறோம்’ என்று நாம்
அக்ஷதை போட்டுக்கொண்டு கிளம்பினதால் தானே இந்தப் பத்துப் பதினைந்து பேர்
வழக்கமாகத் தாங்கள் இருக்கிற இடத்தில் காய்ச்சிக் குடிப்பதை, அல்லது பிச்சை எடுத்துத் தின்னுவதை
விட்டுவிட்டுப் பசியும் பட்டினியுமாய் வெய்யிலில் இத்தனாம் தூரம் ஓடிவந்து ஏமாந்து
போகும்படி நேர்ந்திருப்பது? ஆக, கூட்டல், கழித்தல் பார்த்தால், உபகாரம் பெரிசா, அபகாரம் பெரிசா? ‘என்று
தோன்றிற்று.
தானத்திலெல்லாம்
உசந்ததாகச் சொல்லப்படும் அன்னதானத்தில்கூட இப்படி நல்லதோடு கஷ்டமும் கலந்து
வருகிறது!
எதற்குச்
சொல்கிறேனென்றால்: நாம் ஒருத்தனுக்கு உபகாரம் பண்ணுவதே நேராக இன்னொருத்தனுக்கு
அபகாரமாக ஆகாதபோதுகூட, எப்படியோ சுற்றி
வளைத்துக்கொண்டு போய் யாருக்கோ கஷ்டம் கொடுத்து, அதோடு, ‘உபகாரம்
செய்கிறேன்’ என்று அக்ஷதை போட்டுக்கொண்டு கிளம்பின நாமும் மனஸ்
வருத்தப்படும்படியாகலாம் என்று காட்டுவதற்குத்தான்!
அதாவது, எந்த உபகாரமானாலும் அத்தனை ஜனங்களுக்கும் செய்ய
எவருக்கும் ஸாத்யமில்லை. எவராவது நம்முடைய உபகாரத்தை எதிர்பார்த்து ஏமாந்து
மனமொடிந்து போகும்படியாகவும்தான் ஆகிறது. கோடீச்வரனானால்கூட ஸத்கார்யங்களுக்கு
அவன் கொடுக்க ஆரம்பிக்கும்போது புற்றீசல் மாதிரி (நன்கொடை) கேட்டுக் கொண்டு பலபேர்
வருகிறபோது, ஏதோ ஒரு இடத்தில்
அவன் ‘இல்லை, போ’ என்று கையை
விரிக்கும்படியாகிறது. இவன் (புதிதாக வருபவன்) கேட்கிற cause உசந்ததாகத் தான் இருக்கிறது. இவனுக்கு முன்னாடி
யாரோ மோசக்காரர்கள்கூட ஏமாற்றி வாங்கிப் போயிருக்கிறார்கள். ஆனாலும் இவனுக்குக்
கொடுப்பதற்கில்லாமல் ஏமாற்றத்தோடு அனுப்பிவைக்க நேருகிறது.
ஆஸ்பத்திரி,
ஸ்கூல் என்று வைக்கும்போது, ‘Bed இல்லை;’ ஸீட் இல்லை’என்று சொல்லி, ரொம்பவும் நோயாளியாக உள்ள ஒருவனை, நல்ல புத்திசாலியான குழந்தை ஒன்றை ஏமாற்றி, மனஸை வருத்தித் திருப்பியனுப்பும்படியாகவும்
ஏற்படுகிறது.
ஒரு உயிரைக்
காப்பாற்றுவது எத்தனை உத்தமமான கார்யமாகத் தெரிகிறது? அதிலேகூடக் கெடுதல் வருகிறது!
ஸொந்த ஸமாசாரத்தில்
இன்னொன்று சொல்கிறேன்:
ஒரு ஊரிலே
நாங்கள் முகாம் போட்டிருந்த ஜாகை ரொம்ப பழைய நாள் கட்டிடமாக இருந்தது. ஓட்டுக்
கட்டிடம். நடுவிலே முற்றம். கட்டிடக் கூரையின் உத்தரம் அநேகமாக
உளுத்துப்போயிருந்தது. அதிலே, ‘விர்ர்’
‘விர்ர்’என்று சத்தத்துடன் பறக்கிற பெரிய வண்டுகள் துளை போட்டுக்கொண்டு வாஸம்
பண்ணிக்கொண்டிருந்தன. அவை அப்பப்போ முற்றத்திலே வந்து விழுந்து புரளும். இப்படி
ஒரு வண்டு குப்புற விழுந்தபின் அதனால் மறுபடி நேராக நிமிர்ந்து புரள முடியவில்லை.
எப்படியாவது புரண்டு பறந்து போய்விடணுமென்று அது காலை உதைத்துக் கொண்டு ரொம்ப
ப்ரயத்தனம் பண்ணியும், முடியவில்லை.
அப்போது-அந்த முற்றத்திலே சாரி சாரியாகக் சுட்டெறும்புகள் போய்க் கொண்டிருந்தன.
அதுகள் இந்த வண்டு இப்படி வயிறு மேலேயும் முதுகு கீழேயுமாக ஒன்றும் பண்ணிக்கொள்ள
முடியாமல் காலை உதைத்துக்கொண்டு கிடப்பதைப் பார்த்ததும், இதுதான் ஸமயம் என்று அதனிடம் வந்து மொய்த்துக்கொண்டு
‘வெடுக்கு’ ‘வெடுக்கு’ என்று அதன் கால்களைப் பிய்ப்பதற்காகக் கடிக்க ஆரம்பித்தன.
வண்டு ஸஹிக்கமுடியாமல் அவஸ்தைப்படுவது தெரிந்தது. பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
வண்டைப் புரட்டி
ஒரே நேரே போட்டால் அது பறந்து போகுமே, ஒரு உயிர் பிழைத்துப் போகுமே என்று நினைத்தேன்.
அப்படியே வண்டைப்
புரட்டிப் போட்டது.
ஆனால் என்ன
நடந்ததென்றால், அது தன் உயிர்
தப்பினால் போதுமென்று உத்தரத்துத் துளைக்குப் பறந்து போய்விடவில்லை.
என்ன பண்ணிற்று
என்றால், பழி தீர்த்துக்கொள்கிற
மாதிரி அந்த எறும்புகளையெல்லாம் பிடித்து ‘லபக்’ ‘லபக்’ என்று தின்ன
ஆரம்பித்துவிட்டது!
ஒரு உயிருக்கு
உபகாரம் பண்ணப் போன லக்ஷணம் இத்தனை உயிர்களுக்கு அபகாரமாக முடிந்தது! ‘நாம் ஏதோ
ஒரு ப்ராணியைக் காப்பாற்றி நல்லது பண்ணி விட்டோமாக்கும்’ என்ற ‘ஈகோ’வுக்கு ஒரு அடி
போட்ட மாதிரி, பல ப்ராணி
வதைக்குக் காரணமாகும்படியாயிற்று.
ஸாதுவான ஒரு
மானைப் புலியிடமிருந்து காப்பாற்றினால்கூட, அந்தப் புலிக்கு சாகபக்ஷணம் (மரக்கறி போஜனம்)
செய்யமுடியாதபடி ஈச்வரனே வைத்திருப்பதால், மானுக்குச் செய்யும் உபகாரம் புலியைப் பட்டினி போட்டுக் கஷ்டப்படுத்துவதாக
ஆகிறது! அதுவும் ஒரு உயிர்தானே? அது வேண்டுமென்றா
தன்னைத் தானே துஷ்ட ப்ராணியாகப் படைத்துக் கொண்டிருக்கிறது? இது ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம்,
மஹா துஷ்டனாக, லோக கண்டகனாக இருக்கிற ஒரு ராவணனை பகவானே அவதாரம் பண்ணிக்
கொல்கிறானென்றால்கூட அப்போது பரம ஸாத்வியாக, உத்தமியாக இருக்கப்பட்ட ஒரு மண்டோதரியின் மாங்கல்யத்தைப்
பறித்து அவளைக் கதறக் கதற அடிப்பதாக இருக்கிறது.