பகைவருக்கும்
அருளிய பகவான்
(Courtesy: Dinamani, Tamil Daily)
விருபாக்ஷ
குகையில் பகவான் தங்கியிருந்த நாட்களில்
கூட இருந்த மிகச் சில
அடியார்களில் பெருமாள் சுவாமியும் ஒருவர். ஒரு
முறை பழனிச் சுவாமியும்
பெருமாள் சுவாமியும் வெளியே போயிருந்த சமயம்
விருபாக்ஷ குகைக்கு
சில பயங்கரத் தோற்றமுடைய பைராகிகள் வந்தனர். பகவான் தனியாக இருக்கிறாரா
என்பதை உறுதி செய்து கொண்டு
அவரிடம் `நாங்கள் பொதிகை மலையிலிருந்து வருகிறோம். அங்கே
ஒரு பெரிய சித்தரைச் சந்தித்தோம்.
அவர் உங்களை பொதிகை மலைக்கு அழைத்து
வரச் சொன்னார்.' என்றனர். பகவான் வெறுமனே மௌனம்
காத்தார். சில மர வெட்டிகள்
பகவான் குகையில் சில பைராகிகள் இருப்பதை
வழியில் பழனிச் சாமியிடமும் பெருமாள்
சாமியிடமும் சொல்ல அவர்கள் குகைக்கு
விரைந்தனர். பெருமாள் சாமி பைராகிகளைப் பார்த்து
விட்டு சந்தைக்கு விரைந்து சென்று ஒரு பெரிய
அண்டாவையும் டின் டின்னாக எண்ணையும்
வாங்கிவந்து விறகுகள் சேர்த்து அண்டாவில் எண்ணையைக் கொட்டி கொதிக்க வைக்க
ஆரம்பித்தார். பைராகிகள் அது என்னவென்று வினவ
`நீங்கள் சொன்ன சித்தர் என்
கனவிலும் வந்தார். நாளை சில பைராகிகள்
உங்கள் குகைக்கு வருவார்கள். அவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்.
நீ வேண்டுமென்றால் அவர்களைச் சோதிக்க அவர்கள் உடம்பில்
காய்ச்சிய எண்ணையைக் கொட்டிப் பார். எந்த தீக்காயமும்
அவர்களைத் தீண்டாது.' என்றார். அதைச் செய்து பார்க்கத்
தான் எண்ணெய் காய்ச்சுகிறேன். சித்தர்
வார்த்தையை நான் தட்டக்கூடாது அல்லவா?'
என்றார். பைராகிகள் பெருமாள் சுவாமி உள்ளே சென்ற
சமயம் மெதுவாக நழுவி விட்டனர்.
பகவான் உட்பட அனைவரும் நடந்தது
பார்த்து சிரித்து ரசித்தனர்.
.பகவானுடன்
தங்கியிருந்த நாட்களில் அவரும் மற்றவர்களும் சாப்பிட
ஊருக்குள் சென்று பிக்ஷை எடுத்துக்
கொண்டு வருவது பெருமாள் சுவாமியின்
வழக்கம். ஒருமுறை ஒரு அழகான
பாடலை பகவான் பெயரில் பெருமாள்
சுவாமி எழுதி வந்தார். தாம்
தான் எழுதியதாகச் சொன்னதும் பகவான் அதைப் படித்துப்
பார்த்துவிட்டு அவரைப் பாராட்டி முருகனாரிடம்
அதை நோட்டுப் புத்தகத்தில் எழுதிப் பாதுகாக்கச் சொன்னார்.
நான்கு நாட்களுக்குப் பிறகு இன்னுமொரு பாடல்
கொண்டு வந்தார். பகவானும் மற்றவர்களும் அவரைப் பாராட்டினர். சில
நாட்களுக்கு ஒருமுறை பெருமாள் சுவாமி
பாடல் கொண்டு வருவதும் அது
வராவிட்டால் `ஏன் பிறகு எழுதவில்லை?'
என்று பகவான் கேட்பதுமாக இருந்தது.
ஒரு பத்து பாக்கள் வந்த
பிறகு தான் அவற்றை எங்கோ
தாம் படித்தது பகவான் நினைவிற்கு வர
அவர் முருகனாரை திருவருட்பா புத்தகம் எடுத்து வரச் சொல்லிப்
பார்த்தார். அதில் ராம பதிகம்
என்ற தலைப்பில் அந்தப் பாடல்கள் அப்படியே
இருந்தன. `ராமா ' என்ற இடங்களில்
எல்லாம் `ரமணா' என்று பெருமாள்
சுவாமி மாற்றியிருந்ததும் வெட்டவெளிச்சமானது. மற்றவர்கள் கிண்டலுடன் பெருமாள் சுவாமியைப் பார்த்ததும் பகவான் `என்ன செய்வது?
இங்கே வருகிற எல்லோருமே பாடவும்
எழுதவும் தான் செய்கிறார்கள். முடிந்தவர்கள்
எழுதுகிறார்கள். முடியாதவர்கள் எழுதியதைப் பயன்படுத்தி படித்துப் பார்த்து ரசிக்கிறார்கள். இப்போது என்ன? ரமணாவும்
ராமாவும் ஒன்று தான். விடுங்கள்'
என்றார்.
ஆரம்ப காலக் கட்டத்தில் ஸ்கந்தாஷ்ரமத்திற்கு
பெருமாள் சுவாமி மேலாளராக இருந்தார்.
பின்னர் ரமணாஷ்ரமம் ஆரம்பிக்கப் பட்ட பின்னரும் சிறிது
காலம் பணியாற்றினார். பொதுப் பணம் கையாண்ட
குற்றத்தில் அவரை பகவானின் பூர்வாசிரம
தம்பி சின்ன சுவாமி நீக்கிவிட்டு
அவரே மேலாளர் பொறுப்பேற்றார். அப்போது
முதல் பகவான் மேல் பெருமாள்
கோபத்துடன் இருந்தார். பகவான் பக்தராக இருந்த
சமயத்தில் பொது மக்களிடமிருந்து பணம்
சேகரித்து ஒரு அருமையான பகவான்
சிலையைச் செய்து பெருமாள் சுவாமி
வழிபட்டு வந்திருந்தார்.
பின்னாட்களில்
அதே கல் சிலையை திருவருணை
வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று மக்களிடம் `இதன்
மேல் துப்புங்கள். செருப்பு மாலை போடுங்கள்' என்று
சொன்னார். பகவானைப் பற்றி தெரிந்திராத
ஒரு நபருக்குக் கள் வாங்கிக் கொடுத்து அவர் பகவானைக் கண்டபடி பேச வைத்தார். ஆனால் இது
எல்லாவற்றையும் மிஞ்சும்படி அவர் செய்தது தான் பகவான் மேல் வழக்கு தொடுத்து அவரை வழக்காடு
மன்றத்திற்கு இழுக்க முயன்றது. பகவான் ஒரு சன்யாசி என்பதால் அவர் உலகத்தைத் துறந்தவர்.
ஆஷ்ரமம் எதுவும் அவர் நடத்த முடியாது. தம்பி போன்ற பந்தங்களைத் துறந்தவர். ஆகவே சின்ன
சுவாமியை வைத்தும் சொத்து சேர்க்க முடியாது. நான் தான் கந்தாஷ்ரம காலத்திலிருந்து இங்கே
மேலாளராக இருக்கிறேன். ஆகவே நான் தான் ரமணாஷ்ரம சொந்தக்காரன்.' என்று பெருமாள் சுவாமி
வாதாடினார்.
இருப்பினும்
பிரிட்டிஷ் அரசு பகவான் மகிமையை
ஓரளவு அறிந்திருந்ததாலும் ஒரு பக்தர் முயற்சியாலும் வழக்கு
விசாரணை
ரமணாஷ்ரமம் வளாகத்திலேயே நடந்தது. பகவான் தான் ஒரு
அதியாஷ்ரமி என்ற வாதத்தை முன்
வைத்து வாதாடினார். `நான்கு ஆஷ்ரம விதிகளுக்கும்
உட்படாதவர்கள் அதியாஷ்ரமிகள். இவர்களை சாஸ்திரம் முழு
மனதோடு ஏற்றுக்கொள்கிறது. சுகர் போன்று பலர்
இந்த ஆஷ்ரமத்தில் இருந்தவர்கள் தாம். நான் கல்யாணமாகாதவன்
என்றாலும் சுகர் திருமணமும் செய்து கொண்டு சந்ததியையும்
உண்டாக்கினார். அதியாஷ்ரமிகள்
அது மாதிரி வீடு போன்று
சொத்துகளையும் சேர்க்கலாம்.’ என்று
விரிவாகத் தம் வாதத்தை முன்வைத்தார்
பகவான். `என் ஆத்மாதான் என்
குரு' என்றும் அவர் சொன்னபோது
எதிர்தரப்பு வக்கீலால் எதுவும் பேச முடியவில்லை.
வழக்கு ஒரு வழியாக ஆஷ்ரமம்
சார்பாக முடிந்தது.
ஆனாலும்
பெருமாள் தொடர்ந்து அவதூறு செய்திகள் அடித்து
ஆஷ்ரம வாசலிலேயே விநியோகிப்பது என்று பகவானுக்கு எதிராகப்
பரப்புரையைத் தொடர்ந்து செய்து வந்தார். விரைவிலேயே
அவர் உடல்நிலை மோசமானது. அவரிடம் பணம் பெற்றவர்கள்
அவரை ஏமாற்றி விட்டனர். கையில்
பணமும் இல்லாமல், உடல் நிலையும் மோசமாகி
அவர் டவுனில் ஒரு பெஞ்சில்
அமர்ந்து கொண்டு வருவோர் போவோரிடம்
பிச்சை கேட்கும் நிலைக்குத் தள்ளப் பட்டார். 1945ம்
வாக்கில் அவர் தங்கியிருந்த துர்கை
ஆலயத்திருந்தும் அவர் அகற்றப்பட்டார். கடைசி
நாட்களில் சேஷாத்ரி ஆஷ்ரம வளாகத்தில் ஒரு
குடிசையில் தங்கினார்.
சில ரமணாஷ்ரம பக்தர்கள் அவர் மேல் பரிதாபப்பட்டு
பகவானின் ரகசிய அனுமதி பெற்று
அவர் ஆஷ்ரமத்திலிருந்து மருந்தும் உணவும் சர்வாதிகாரிக்குத் தெரியாமல்
கொடுத்து வந்தார்கள்.
பகவானுக்கு
அவர் மேல் தொடர்ந்து பரிவு
இருந்தது. `பாவம் பெருமாள் சுவாமி,
ஆரம்ப காலத்தில் அவர் நமக்கு நிறைய
செய்திருக்கிறார். நான் ஒரு முறை
வயிற்றுக் கோளாறு வந்து உடலிலிருந்து
நீர் வெளியேறி அவதிக்குள்ளான போது அவர் தான்
என்னருகில் இருந்து சிஷ்ருசை செய்தார்.
பின்னர் என்னவோ கோர்ட் கேஸ் அது
இது என்று நிலைமை மாறி
விட்டது. இன்று பாவம், நோயில்
வாடுகிறார்.' என்றார்.
கடைசியில்
ஒரு வழியாகத் தம் தவறை பெருமாள்
உணர்ந்தார். பகவானைப் பார்த்து `பகவான், உங்களுக்கு எதிராக
நான் பல தவறுகள் இழைத்திருக்கிறேன்.
எனக்கு மன்னிப்பு கேட்கப் போவதில்லை. ஆனால்
மறந்து விடாதீர்கள். நான் நரகம் தான்
போகப் போகிறேன்.' என்றார். பகவான் வழக்கமான பரிவுடன்
`அங்கேயும் நான் உங்கள் கூட
இருப்பேன்' என்றார்.
பக்தனாக
நெடு நாட்கள் பகவான் கூட
இருந்து பகைவனான பெருமாள் சுவாமியின்
சரிதத்தில் நிறைய பெருமிதமும் படிப்பினையும்
ஒரு சேரக் கலந்திருக்கின்றன.
(bhagavan ramana maharshi’s 66th aradhana falls
on 4th May 2016)
ஸ்ரீதர்
சாமா