வியாழன், 22 மார்ச், 2012

பகவான் ரமண மகர்ஷி மற்றும் காஞ்சி மகாஸ்வாமிகளின் பொன் மொழிகள்

சங்கர பகவத்பாதர்கள் பக்தியின் லக்ஷணத்தை சிவானந்த லஹரியில் இவ்வாறு வர்ணித்திருக்கிறார்:

"அழிஞ்சில் விதை எப்படித் தாய் மரத்துடனேயே ஒட்டிக் கொள்கிறதோ, ஊசி எப்படி காந்தத்தால் கவரப் படுகிறதோ, பதிவிரதை எப்படி தன் பதியின் நினைவிலேயே ஆழ்ந்திருக்கிறாளோ, கொடி எப்படி மரத்தைத் தழுவி வளர்கிறதோ, நதி எப்படி சமுத்திரத்தில் கலக்கிறதோ, அப்படியே பசுபதியின் பாதாரவிந்தங்களில் எக்காலமும் மனத்தை அமிழ்த்தியிருப்பதுதான் பக்தி என்பது.


சின்னஞ்சிறிய சூஷ்மமான தர்மங்களை எல்லாம் மறந்துவிட்டோம். நமக்கு உணவு தருபவனுக்கு நல்லபடி நிவேதனம் நடக்கவேண்டும். நமக்கு உடை தருபவனுக்கு நல்ல வஸ்திரம் இருக்கவேண்டும். இப்போது ஓர் ஊரில் யார் அழுக்குத் துணிகட்டிக் கொண்டிருக்கிறான் என்றால் அது ஸ்வாமிதான். நம் ஊர் கோயில் ஸ்வாமியின் வஸ்திரம் சுத்தமாயிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்திவிட்டோமானால், நம்மனதின் அழுக்கு போய்விடும்.

நம்முடைய சாஸ்திரங்களில் இல்லாத ஸயன்ஸ் எதுவுமே இல்லை. ஆயுர்வேதத்தை சரகர், சுச்ருதர் முதலானவர்களின் நூல்களைப் பார்த்தால். இப்போதைய பெரிய டாக்டர்களும் அதிசயிக்கும்படியான மருத்துவ முறைகளையும், சர்ஜரி முறைகளையும் தெரிந்து கொள்கிறோம். நவீன மருந்துகளைவிட, நவீன சர்ஜரிக்கு நாம் பழக்கமாகிவிட்டதால், ஆயுர்வேதத்தில் சர்ஜரிக்கு இடமில்லை என்று பலர் நினைக்கிறார்கள். என்ஸைக்லோபீடியா பிரீடானிகாவில் கூறியிருக்கிறபடி, சர்ஜரி இந்தியாவில்தான் தோன்றியது. தன்னுடைய மிகத் தீவிரமான பக்தியைப் பற்றிக் குறிப்பிடும்போது, குலசேகர ஆழ்வார் "வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன்போல்" என்கிறார். அறுப்பது" என்பது சர்ஜரி. "சுடுவது" காடரைஸேஷன் [Cauterisation] .

எனக்கு கனகாபிஷேகத்துக்கும், பீடாரோஹணத்துக்கும் காட்டுகிற உற்சாகத்தை வேத ரக்ஷணத்தில் காட்டி அதற்காகக் கமிட்டி, திட்டம், வசூல் எல்லாம் செய்யுங்கள் என்கிறேன். வேத ரக்ஷணத்தை அடுத்த சந்ததிக்கு ஜீவிய கர்மமாக ஆயுட்காலப் பணியாக வைக்க முடியாவிட்டால் கூடப்போகிறது.

எட்டு வயதிலிருந்து ஆரம்பித்துப் பிறகு, பத்து வருஷங்களுக்கு இளம் பிள்ளைகளுக்கு தினம் ஒரு மணிநேரம் வேத மந்திரங்களிலும், பிரயோகங்களிலும் பேட்டைக்குப் பேட்டை கூட்டுறவு அடிப்படையில் ஏற்பாடு செய்யுங்கள் என்கிறென்.

இதுதான் எனக்கு உண்மையான கனகாபிஷேகம், உற்சவம் எல்லாம்.

ஒருவருக்குச் சொந்தமாக கொஞ்சம் நிலம் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். அதில் வருஷத்திற்க்கு வருஷம் விளைச்சல் அதிகமாகிறது. "இந்த வயல் என்னுடையது"என்பதால் விளைச்சல் அதிகமாகும்போதெல்லாம் அவருக்கு மனம் குளிர்கிறது. ஆனந்தம் உண்டாகிறது. பிறகு விளைச்சல் குறைய தொடங்குகிறது. வயலை
வேறு ஒருவருக்கு விற்று விடுகிறார். மறுபடியும் அதே நிலத்தில் விளைச்சல் கூடுகிறது. இப்போது அதைப் பார்க்கும்போது அவருடைய மனம் குளிரவா செய்கிறது?"அட டா, போன வருஷம் நம்மிடம் இருக்கிறபோது
நிலம் தரிசு போல் பொட்டலாக இருந்தது, இப்போது எவனோ ஒருவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறதே" என்று
வயிற்றெரிச்சல்தான் உண்டாகிறது.

"எனது" என்ற சம்பந்தம் இருந்த மட்டும்தான், அமோக விளைச்சலால் சந்தோஷம் ஏற்பட்டது. பிறகு அதே விளைச்சலில் உணர்ச்சி அடியோடு மாறிவிட்டது.

-mahaswamigal

பகவான் ரமணர் தன் கைப்பட வரைந்த திரு அருணை மலை. அருணாச்சல சிவ .அருணாச்சல சிவ . அருணாச்சல சிவ . அருணாச்சலா