வியாழன், 6 ஜூலை, 2017

புதன், 5 ஜூலை, 2017

, ‘இந்த மடத்தை நாம் எங்கே வழி நடத்துகிறோம்? அந்த சந்திரமௌலியும் காமாட்சியுமல்லவா வழி நடத்துகிறார்கள்!

மகா பெரியவாஅனுபவங்கள் ஆயிரம்
பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் கூறுகிறார்

வம்பு வழக்கினையும், போலீஸ் கைதையும், அந்த நாளில் அதாவது நூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்பே காஞ்சிமடமும் சந்தித்துள்ளது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

அந்த சம்பவத்தை அன்பர் ரா.கணபதி அவர்களின்கருணைக் காஞ்சி கனகதாரைஎன்னும் நூல் வாயிலாக நான் அறிய நேர்ந்தபோது, பேராச்சரியமும், கூடவே பல அரிய செய்திகளையும் உணர்ந்துகொண்டேன்.
இத்தொடரை வாசிப்பவர்கள், அறிய வேண்டி, சுருக்கமாய் அந்த வரலாற்றுச் சம்பவத்தை அன்பர் கணபதி அவர்களை பிரார்த்தித்துக்கொண்டு, இத்தொடரிலும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
ஸ்ரீமடம் கைதான அந்தக் கதை, ஆச்சரியமூட்டுவதாகும்.

இது 1843-44களில் நடந்த சம்பவம்!
பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்று திருவானைக்காவல். இதில் குடிகொண்டிருப்பவள் அகிலாண்டேஸ்வரி. இவளது அனுக்கிரகத்துக்கு கவிராஜ காளமேகமே பெரும் சாட்சி.
இவளது அணிகளில் காதுத்தாடங்கம் என்பது ஒரு முக்கியமான அணி. திருக்கடவூரில் அபிராமி பட்டன் அமாவாசை அன்று நிலவுவரும் என்று தன்னை மறந்து சொல்லி விட, அந்த பட்டனின்பக்தனின், வாக்கு பொய்யாகிவிடாதிருக்க, சரபோஜி மன்னன் முன்னாலே, அந்த அபிராமி தன் தாடங்கத்தை கழற்றித்தான் வானில் வீசி எறிந்தாள். அதுவே முழு நிலவாகி ஜொலித்து அபிராமி பட்டரை காப்பாற்றியது.

தாடங்கத்துக்கு பின்னாலே இப்படி ஒரு சம்பவம் உண்டு. இந்த தாடங்கங்கள் அகிலாண்டேஸ்வரிக்கும் மிக பிரசித்தி. காரணம் ஆதிசங்கர பகவத் பாதள்தான் முதலில் இவளுக்கு தாடங்கம் சாற்றி, அவளின் பேரெழிலை பிறர் காணச் செய்தவர்.
அதன்பிறகு அந்த தாடங்கம் தேய்ந்து போகும் போதோ, இல்லை பழசாகிப் போகும்போதோ புதிய ஒன்றை செய்து தருவது வழக்கம்.

1843-லிலும் அப்படிச் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டு, அதை ஸ்ரீமடம் செய்து தந்தபோது, திருச்சியைச் சேர்ந்த ஒரு அன்பர், அம்பாளுக்கு அணி செய்யும் உரிமை தனக்கே உரியது என்று கோர்ட்டுக்கே போய்விட்டார். ஸ்ரீமடத்து உரிமையை அவருக்கு விட்டுத் தருவதில் கௌரவம் பார்த்த ஸ்ரீமடமும், தன் உரிமையை நிலைநாட்ட வக்கீல் வைத்து கோர்ட்டில் பதில் வழக்காடியது. வழக்கென்று வந்தால், அது என்ன அவ்வளவு சுலபத்தில் முடியுமா? கீழ் கோர்ட், மேல் கோர்ட் என்று சென்ற அது, ஒரு வழியாக முடிந்து மடத்துப்பக்கம் தீர்ப்பாகியது.

இதற்கு எத்தனை காலம் ஆனது என்று தேதிவாரியாக யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. ஏனென்றால் இன்றுபோல காலண்டர், கடிகாரம், ரிஸ்ட் வாட்ச், நாளிதழ்கள் என்று அன்று எதுவும் கிடையாது. கோயிலில் நடக்கும் விழாக்களை வைத்தும், தெருவில் தமுக்கு போடுபவன் செய்தி சொல்வதற்கு முன் தமிழ் வருஷ தேதி சொல்லி, செய்தி சொல்வதை வைத்தும்தான், அன்று வெகுஜனங்கள் நாள் கிழமைகளை தெரிந்து வந்தார்கள்.
ஆகையாலே, இந்த கேஸ் எவ்வளவு காலம் நடந்தது என்பதை அன்று சொன்ன விதம் மிக அலாதியானது

அதாவது, ஸ்ரீமடம் திருவானைக்காவலுக்கு போய் டேரா போட்டு அமர்ந்து பிறகுதான் தாடங்கத்தை சாத்தியது. அன்று சந்திர மௌலீஸ்வர பூஜையின்போது பிழியப்பட்ட எலுமிச்சம்பழத்தை வீசி எறிந்ததில், விழுந்த விதைகளில் சில எலுமிச்சை மரமாக முளைத்து, பின் பூவிட்டு பிஞ்சுவிட்டு காத்து திரும்பவும் சந்திர மௌளீஸ்வர பூஜைக்கே வந்து சேர்ந்ததாம். அதன்பிறகே, மடமும் அங்கிருந்து கிளம்பிய தாம்.
என்றால் எவ்வளவு காலம்?
ஒரு எலுமிச்சம் பழ விதையானது, மரமாகிப் பழம் தரும் அளவிலான காலம். அதாவது சுமாராக நான்கில் இருந்து ஐந்து வருடங்கள்!

இவ்வளவு நீண்ட காலம் வழக்கு நடத்திய தால், ஸ்ரீமடத்துக்கு நிறைய செலவு ஆகி கணக்கு பார்த்தபோது, ஸ்ரீமடம் கடனில் மூழ்கியிருந்ததாம்.
ஒரு தாடங்கச் சண்டையால் கடன் வந்ததை எண்ணி, அப்போதைய ஸ்வாமிகள் மிகவும் வருந்தினாராம். எப்படித் தெரியுமா? ‘பேசாமல் நான்தான் அணிவிப்பேன் என்ற அந்த நபருக்கே உரிமையை தந்திருக்கலாம்.
அம்பாளுக்கு யார் செய்தால் என்ன?
ஸ்ரீமடத்து உரிமை என்று கர்வப் பட்டதற்கு பலன், கடன். ஒரு மடாதிபதியான எனக்கு இது புரியாமல் போய்விட்டதே. ச்சே!’ என்று தன்னை மிக நொந்து கொண்டாராம் ஸ்வாமிகள். இதுதான் உண்மையான துறவியின் லட்சணம். இந்த மாதிரியான சத்யவிசாரமே துறவிகளையும் மேம்படுத்தும்.
இங்கே எங்கேயும் ஸ்வாமிகள் அம்பாளைப் பார்த்து, உனக்கு செய்யப்போய் நான் கடனாளி ஆகிவிட்டேனே என்று சராசரியாக நினைக்கவோ, ஸ்ரீமடத்துக்கு பொருள் வேண்டும் என்றும் பிரார்த்திக்கவோ இல்லை.

தான் இந்த உண்மையை உணர வேண்டும் என்றே வழக்கு, நீண்டு ஸ்ரீமடத்துக்கு கடனும் நேரிட்டது என்பதுதான் அவர் புரிந்துகொண்ட உண்மை.
அதே சமயம் இந்த கடனில் இருந்து விடுபட, அப்போது ஸ்வாமிகளுக்கு அடுத்த பட்டத்தில் இருந்த இளையவர் ஒரு திட்டம் போட்டார். அப்போது தஞ்சாவூருக்கு சரபோஜியின் பிள்ளைதான் ராஜாவாக இருந்தார். அவரிடம் போய் உதவி கேட்டார். இப்படி ராஜாவிடம் உதவி கேட்கப் போவதை பெரியவரிடம் கூறவில்லை. இளையவரின் எண்ணமே அப்போது வேறாக இருந்தது. ராஜாவின் உதவியோடு ஸ்ரீமடத்தின் கடனை நீக்கி, பழையபடி மடத்தை நிமிர்த்தி விட்டால், அது பெரியவருக்கும் மகிழ்ச்சியையும் புது தெம்பையும் தரும் என்று எண்ணியே, ராஜாவிடம் போய் உதவி கேட்டார்.

ஆனால், கொஞ்சமும் எதிர்பார்க்காத விதத்தில், சரபோஜியின் பிள்ளையோ, தன்னால் உதவமுடியாது. உதவிடும் நிலையிலும் நானில்லைஎன்று கூறிவிட்டார். இதனால், இளையவருக்கு பெரிதும் ஏமாற்றமாகிவிட்டது. பின் தனக்கு ஏற்பட்ட தோல்வியை பெரியவரிடம் கூறி வருத்தப்படவும் செய்தார். ஆனால், அதன்பின் நடந்ததுதான் அற்புதம்அது?
மடத்தின் கடனை அடைக்க வேண்டும் என்கிற பிரயாசை, அன்றைய இளையவரை, தஞ்சாவூர் சென்று சரபோஜியின் பிள்ளையான சிவாஜியை பார்த்து உதவியை கேட்கச் செய்தது. ஆனால், அவரோதனக்கு வசதிப்படாது. தன் நிர்வாகமே சிரமத்தில் இருக்கிறதுஎன்பதுபோல கூறி அனுப்பிவிட்டார்.

இளையவர் இதை கொஞ்சம்கூட எதிர்பாக்கவில்லை. பெரும் ஏமாற்றமாகி விட்டது.
கிட்டத்தட்ட இடிந்த கோயிலை கட்டுவதற்காக டொனேஷன் கேட்டு, ஒருவரிடம் செல்ல, அவர் மறுதலித்துப் பேசும் போது, நமக்கு ஏற்படுமே அப்படி ஒரு ஏமாற்றம்தான் இது!
நமக்கு இது தாங்கும். சில நாட்களில் சரியாகிவிடும். ஆனால், இளையவர் போன்ற பீடாதிபதிகளை, இந்த மாதிரியான ஏமாற்றங்கள் பெரிதாகவே பாதிக்கும். ‘நாமே நேரில் போயும் காரியம் பலிதமாகவில்லையே…? என்றால், இந்த மடத்துக்கும், சங்கரர் வழி நடக்கும் சன்னியாசியான தமக்கும் மதிப்பில்லையா?

ஒருவேளை பொருள் கேட்டு, தான் செல்லாதிருந்தால் மதிக்கப்பட்டிருப்பேனோ? நேரில் சென்றது பிழையோ?’ இப்படி இளையவருக்குள் ஏராளமான கேள்விகள்!
மனபாரம் தாளாமல் பெரியவரிடம் அதை இறக்கவும், பெரியவர் அதற்கு சொன்ன பதிலில், அவரது முதிர்ச்சியும் தவசீலமும் தெரிந்தது.
போகட்டும் விடுமடத்தை நாம் நடத்துவதாக கருதுவதே தவறு! அந்த சந்திரமௌலியும், காமாட்சியுமல்லவா வழிநடத்துகிறார்கள். எனவே, இதை அவளிடம் விட்டுவிட்டு, நாம் நம் கடமையைச் செய்வோம். இதற்கு மேல் இது குறித்து கவலைப்படுவது நமக்கு அழகல்ல. அது நமக்கு தெளிவில்லை என்றாகிவிடும்என்றாராம்.
இளையவர் துறவுக்குப் புதியவர். அதே சமயம் வயதில் இளையவர். இதனால் லௌகீகமா காம்யார்த்தமாய் யோசித்து செயல்பட்டுவிட்டார். பெரியவரும் அதற்காக அவரை கோபிக்காமல் ஆற்றுப்படுத்தினார். அப்படிச் செயல்படும்போது, தம் அனுபவத்தையும் அதில் காட்டினார்.
உச்சபட்சமாக அவர் சொன்னது, ‘இந்த மடத்தை நாம் எங்கே வழி நடத்துகிறோம்? அந்த சந்திரமௌலியும் காமாட்சியுமல்லவா வழி நடத்துகிறார்கள்!’ என்றதுதான்!

இது ஒருவித சரணாகதி
இதுதான் உண்மையில் நான் என்கிற பற்றறுத்த நிலைப்பாடு.
இதுவே உத்தமத்துறவியின் லட்சணம். (இன்று இப்படியா உள்ளது?)
அன்றைய பெரியவர், இளையவருக்கு ஆறுதல் கூறி திருவானைக்காவலை விட்டுப் புறப்பட்டார். மடத்து பரிவாரம் மிகப்பெரியது. யானை, குதிரை, காளை, ஒட்டகம் என்று அதன் கூட்டமும் பெரிதும் காட்சிக்குரியது.

அவ்வளவுபேருடன் கும்பகோணம் சென்று முகாமிடத் தீர்மானித்தார் பெரியவர். வழியில் இடையிடும் தஞ்சாவூரைத் தீண்டக் கூடாது. கோவிலடி வழியாக போய்விடலாம் என்று தீர்மானித்துச் சென்றபோது, திபுதிபுவென்று சரபோஜியின் சிப்பாய்கள் வந்து சுற்றி வளைத்துவிட்டனர்.

நாங்கள் கும்பகோணம் செல்கிறோம்என்று கூறியதை காதிலேயே வாங்காமல், உங்கள் அவ்வளவு பேரையும் மடக்கி கைது செய்து அழைத்துவர உத்தரவுஎன்றபோது, இளையவரிடம் கோபம்.
பெரியவரோ தன் முதிர்ச்சிக்கே உரிய சுபாவத்தோடு, ‘இதுவும் அம்பாள் சித்தம்என்றாராம்!
ஆனால்…?
பெரியவரானவர் அந்த போலீஸ்காரர்களின் ஆக்கிரமிப்பைஇதுவும் அம்பாள் செயலே!’ என்று ஞானருசியோடு பார்க்க, இளையவருக்கு மட்டும் கோபமான கோபம் வந்தது.
உங்கள் சரபோஜி, எதற்காக எங்களை இப்படி சுற்றி வளைத்து பிடிக்கிறார்? இந்த தஞ்சாவூர் நகரத்துக்குள்ளேயே கால் பட்டுவிடக்கூடாது என்று ஒதுங்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஏன் இப்படி வைதீகமானவர்களை சிரமப்படுத்துகிறீர்கள்?” என்று கேட்டதற்கு சிப்பாய்களிடம் பதிலில்லை.
மாறாகநடங்கள்என்கிற உத்தரவு வேறு
இதில் பெரியவரின் மேனாவைச் (பல்லக்கு) சுற்றி மட்டுமே ஏழெட்டு போலீஸ்காரர்கள்!
அதேபோல இளைவருக்கும்…!

மேனாவுக்குள் இருக்கும் இளையவர் மனத்திலோ, சரபோஜி ராஜாவை நினைத்து மிகவே மனம் கொதித்தபடி இருந்தது. ‘உதவி செய்ய முடியாது என்று சொன்னவர், உபத்திரவம் எதற்கு செய்கிறார்?’ என்கிற கேள்வி வேறு

ஆனால், நடந்ததே வேறு

ஊருக்குள் செல்லச் செல்லத் தான் அது புரிந்தது. வைதீக பிராம்மணர்கள் பூர்ணகும்பத்துடன் காத்திருக்க, வழியெங்கும் தண்ணீர் தெளித்து கோலமும் போடப்பட்டிருந்தது.
அதாவது, ராஜ வரவேற்பு!
இப்படிக் கூடவா ஒரு ராஜா இருப்பார்?
அதற்கு சரபோஜி ராஜாவான சிவாஜி மஹாராஜா மிக பணிவாக பதில் கூறினார்.
ஸ்வாமிஜி! முதலில் என்னை மன்னித்துவிடுங்கள். உங்களால் நான் மிக மிக தன்யனாகியுள்ளேன். நீங்கள் உதவி கேட்டு வந்தபோது, நான் அதை சாதாரணமாய் எடுத்துக்கொண்டு உதவ மறுத்து விட்டேன். அதற்காக இப்போது எவ்வளவு சந்தோஷப்படுகிறேன் தெரியுமா?” என்று திருப்பிக் கேள்வி கேட்டார்.

உங்கள் பேச்சு, செயல் எல்லாமே புரியாத புதிராகவே உள்ளதே?” என்றார் பெரியவர்.
உண்மைதான்உங்களிடம் முடியாது என்று நான் சொல்லப்போக, அந்த அம்பாளுக்கே என் மேல் கோபமான கோபம் வந்துவிட்டது. இரவு என் சொப்பனத்தில் தோன்றியவள், ‘என் குழந்தைகளை இப்படி ஏமாற்றி அனுப்பிவிட்டாயேஇதற்கா நான் உனக்கு திரவியங்களை தந்திருக்கிறேன்?’ என்றும் கேட்டாள். உடம்பெல்லாம் வியர்த்திட தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தேன். ஒருபுறம் இப்படி கோபத்துக்கு ஆளாகிவிட்டோமே என்ற வருத்தம் ஏற்பட்டாலும், மறுபுறம் அவள் தரிசனம் கிடைத்ததை நான் என்ன வென்று சொல்வேன்?
உங்களுக்கு கருணை செய்ய உத்தேசித்தவள், போனால் போகிறது என்று எனக்கும் கருணை செய்துவிட்டாள். இது எத்தனை பெரிய பாக்கியம்?” என்று கேட்கவும், பெரியவருக்கும் சரி; இளையவருக்கும் சரி, அப்படியே மனது குளிர்ந்து, கண்களிலும் ஆனந்தக்கண்ணீர் வந்து தேங்கிவிட்டது.

அப்புறமென்ன?

தர்பார்தான்தங்கம், வெள்ளி என்று வாரி இறைத்ததோடு, மடத்து பணிகளுக்கான உபபொருட்களாக கூடாரத்திலே இருந்து வலம்புரிச் சங்கு தங்க வட்டில், வெள்ளிப்பாத்திரங்கள் என்று பரிசாகக் குவித்துவிட்டார்.

இது போக, தஞ்சை ராஜ வீதியில் யானை மேலேறிக்கொண்டு நகர்வலம் வேறு. இந்த நகர்வலத்தின்பொருட்டு, பெரியவர் யானை மேல் ஏற சிரமப்பட்ட போது, சிவாஜி மஹாராஜாவே முன் வந்து தன் தோளைத் தந்து, அதில் பெரியவர் கால் பதிய யானை மேல் ஏறிக்கொள்ள, சிவாஜி மஹாராஜாவிடம் ஒரே பூரிப்பு!

இறுதியில் கூட்டிக்கழித்து பார்த்த போது, மடத்துக் கடன்கள் அவ்வளவும் நீங்கி ஐயாயிரத்துக்கும் மேலாக பொற் காசுகள் மீதமிருந்தது.
அந்த காமாட்சிக்குதான் என்ன ஒரு கருணை?’ இளையவர் மனது நெகிழ்ந்து விட்டது. அதுவே, ‘அவள் இருக்கிறாள். இனி நமக்கென்ன கவலைஎன்று, தொடர்ந்து மடத்துப் பணிகளை வெகு உற்சாகமாக செய்யவும் காரணமாகிவிட்டது.


Pradosha mama's voice, courtesy sage of kanchi site

https://mahaperiyavaa.blog/2024/02/02/ithanai-yamatrai-mahaperiyava-karavalambam-in-sri-pradosham-mamas-voice/